என்னை தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே.. அவனும் இங்க நான்தானே! தோல்விகளினால் புலம்பும் ரோஹிட்

Cricket

2022 இந்தியன் ப்ரீமியர் லீக் ஐ.பி.எல் தொடரில் ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்வியைச் சந்தித்துவருகிற நிலையில், கேப்டன் ரோகித் சர்மா இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். ஆரம்பத்தில் சென்னையும் மும்பையும் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்று ‘நண்பேன்டா’ மோடில் இருந்துவந்தன. இதனிடையே தனது 5ஆவது போட்டியில் சென்னை அணி வென்றதால் மும்பை அணி தற்போது ‘தனிமரம்’ ஆகியுள்ளது. மும்பை அணி 5ஆவது போட்டியில் தோற்றது மட்டுமல்லாமல் லக்னோ அணிக்கு எதிரான 6ஆவது போட்டியிலும் தோற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

6 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா மொத்தமாகவே 114 ரன்கள் தான் இதுவரை அ டித்துள்ளார். இப்படியான தொடர் தோல்வியால் மும்பை அணி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இந்நிலையில் லக்னோ அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பேசியுள்ள மும்பை கேப்டன் ரோகித் சர்மா, அணியில் என்ன தவறு நடக்கிறது எனத் தெரிந்தால் அதை மாற்றிக்கொள்ளலாம் ஆனால் என்ன நடக்கிறது என்றே புரிந்துகொள்ளமுடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

‘எப்போதும் எப்படித் தயார் ஆவேனோ அதுபோலத்தான் தற்போதும் செய்கிறேன் ஆனால் சிறப்பாக அமையவில்லை’ எனத் தெரிவித்துள்ள அவர், அணியின் இந்தத் தொடர் தோல்விக்கு தானே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இந்தத் தொடரில் ‘கம்பேக்’ கொடுத்து மீண்டும் வெற்றி பெறுவோம் எனவும் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அணி வெற்றிபெற்றால் அதில் தனக்குப் பங்கு கோருவதும் அணி தோல்வி கண்டால் அதற்கு மற்றவர்களைக் கைகாட்டுவதுமாக இருந்துவரும் சில கேப்டன்கள் மத்தியில் தோல்விக்குப் பொறுப்பேற்க முன்வந்துள்ள ரோகித் சர்மாவின் செயலைப் பலர் பாராட்டியும் வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.