இந்தியா – பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா அணிகளும் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர

Cricket

இந்தியா – பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் மோதும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியாவில் நடத்த ஆஸி. கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்துள்ளது.

அரசியல் பதற்றம் காரணமாக தசாப்த காலமாக இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐ.சி.சி, ஆசியக்கிண்ண போட்டிகளில் மட்டுமே இரு நாடுகளும் மோதுகின்றன. இந்த நிலையை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் ரமீஸ் ராஜா முயற்சி எடுத்து வருகிறார். இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து என நான்கு நாடுகளும் பங்கேற்கும் இருபதுக்கு 20 தொடரை நடத்த ரமீஸ் ராஜா திட்டமிட்டு, இதுபற்றி ஐ.சி.சி கூட்டத்தில் விவாதிக்கவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தார்.

இந்த தொடரை ஒவ்வொரு வருடமும் நடத்துவதன் மூலம் இந்தியாவும், பாகிஸ்தானும் சர்வதேச ஆட்டங்களில் அடிக்கடி மோதும் நிலைமை உருவாகும். இதன் வழியாக அதிக வருமானமும் கிடைக்கும் என்பதால் இதற்கான ஏற்பாடுகளை ரமீஸ் ராஜா செய்து வருகிறார்.  இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா ஆகிய மூன்று அணிகளும் மோதும் முத்தரப்புப் தொடரை ஆஸி. வில் நடத்த ஆஸி. கிரிக்கெட் சபை விருப்பம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் வைத்து ஆஸி. கிரிக்கெட் தலைமைச் செயல் அதிகாரி ஹாக்லி தெரிவித்ததாவது,

‘முத்தரப்புப் தொடர் எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த காலத்தில் நன்கு நடைபெற்றன. இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகள் மோதும் முத்தரப்புப் தொடரை நடத்த ஆர்வமாகவே உள்ளோம். ஆஸி. வில் ஏராளமான இந்தியர்களும், பாகிஸ்தானியர்களும் வசிக்கிறார்கள். இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் போட்டியைக் காண அனைவரும் ஆவலாக உள்ளார்கள். இதை நாங்கள் நடத்தத் தயாராக உள்ளோம். எதிர்வரும் ஒக்டோபர் 23 அன்று மெல்போர்ன் மைதானத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் ஆட்டத்துக்கான (ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக்கிண்ணம்) அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன.’ என தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.