15வது ஐ.பி.எல் தொடரின் 27வது லீக் போட்டியில் பாப் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 66 ரன்களும், கிளன் மேக்ஸ்வெல் 55 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.
இந்த போட்டியில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த தினேஷ் கார்த்திக்கை, விராட் கோலி போட்டி முடிந்த பிறகு பேட்டி எடுத்தார். இதில் விராட் கோலியின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்ற தனது ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் போட்டி முடிந்தபின் தினேஷ் கார்த்திக்கிடம் விராட் கோலி சிறப்பு நேர்காணல் நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
நான் இதுபோன்ற நேர்காணலை அதிகம் செய்யவில்லை. இன்று இதை செய்வதற்கு ஒரு சிறப்பான இரவு. இதுவரை இந்த தொடரின் ‘மேன் ஆப் தி ஐபிஎல்’ நாயகனுடன் நான் இங்கே இருக்கிறேன். அவர் மிகப்பெரிய இலட்சியத்தை நோக்கி பயணிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் பெங்களூருவுக்காக மட்டுமல்ல, இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் அவர் தன்னை நிரூபித்துள்ளார். உங்கள் ஆட்டத்தைப் பார்த்து ஏபி டிவில்லியர்ஸ் நிச்சயம் பெருமைப்படுவார் என புகழ்ந்து பேசியுள்ளார்.