மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணியின் தலைவரான கைரன் பொல்லார்ட், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எனினும் டி20, டி10 லீக் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடவுள்ளார். 2007 முதல் 2022 வரை 15 ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியிருக்கும் அதிரடி துடுப்பாட்டத்துடன், வேகப்பந்துவீசும் சகலதுறை வீரரான கைரன் பொல்லார்ட் இதுவரையில் ஒரு டெஸ்ட் போட்டியிலும் ஆடாமலேயே சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
123 ஒருநாள் சர்வதேச ஆட்டங்களில் 2,706 ஓட்டங்களுடன், 55 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். 101 இருபதுக்கு 20 சர்வதேச ஆட்டங்களில் 1,569 ஓட்டங்கள் சேர்த்து, 42 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இந்தாண்டு பெப்ரவரியில் இந்தியாவுக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஒருநாள், இருபதுக்கு 20 தொடர்களில் விளையாடியதே அவரது கடைசி சர்வதேச ஆட்டமாகும்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய 3-ஆவது வீரர் என்ற பெருமையை கைரன் பொல்லார்ட் பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.