5.50 கோடி சராசரி விலையில் வாங்கப்பட்ட 35 வயது மேற்பட்ட 12 வீரர்கள்… ஒவ்வொரு வயது பிரிவுக்கு சம்பள விபரம் இதோ

Cricket

2022 ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் உலக அளவில் இருந்து மொத்தம் 590 வீரர்கள் பங்கேற்ற நிலையில் இறுதியாக 204 வீரர்கள் மட்டும் 551 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்டார்கள். அதில் அதிக தொகைக்கு விலைபோன வீரராக இளம் இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் 15.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி சாதனை படைத்தார். அதேபோல் அந்த ஏலத்தில் நிறைய இளம் வீரர்களை வாங்குவதற்கு அனைத்து அணிகளும் பல கோடி ரூபாய்களை செலவிட்டன.

இருப்பினும் இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர்களை அவர்களின் சராசரி வயதின் அடிப்படையில் பார்க்கும் போது மூத்த வீரர்கள் தான் அதிக தொகைக்கு வாங்கப்பட்டுள்ளார்கள்.

  1. மெகா ஏலத்தில் 20 வயதிற்கும் குறைந்த வீரர்கள் 11 பேர் வாங்கப்பட்டார்கள். அதிகபட்சமாக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த இளம் வீரர் தேவால்டு ப்ரேவிஸ் 3 கோடிகளுக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வாங்கப்பட்டார். அவர்களின் சராசரி சம்பளத் தொகை 0.94 கோடியாகும்.
  2. 20 – 25 வயதுடைய வீரர்களில் 60 பேர் வாங்கப்பட்டனர். அதிகபட்சமாக டெல்லி அணிக்கு கெப்டனாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட ரிஷப் பண்ட் 16 கோடிக்கு வாங்கப்பட்டார். இவர்களின் சராசரி சம்பளத் தொகை 2.87 கோடியாகும்.
  3. 25 – 30 வயதிற்கு இடைப்பட்ட வீரர்கள் பிரிவில் அதிகபட்சமாக 86 வீரர்கள் வாங்கப்பட்டனர். அதிகபட்சமாக லக்னோ அணிக்கு கெப்டனாக வாங்கப்பட்ட இந்திய வீரர் கே.எல் ராகுல் 17 கோடிக்கு ஒப்பந்தமாகி சாதனை படைத்தார். இவர்களின் சராசரி சம்பளத் தொகை 3.65 கோடியாகும்.
  4. 30 – 35 வயதுடைய வீரர்களில் 68 பேர் ஏலத்தின் போது வாங்கப்பட்டார்கள். அதிகபட்சமாக மும்பை அணியின் ரோகித் சர்மா மற்றும் சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 16 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இவர்களின் சராசரி சம்பளத் தொகை 4.59 கோடியாகும்.
  5. இறுதியாக 35 வயதிற்கு மேற்பட்ட மூத்த வீரர்களில் 12 பேர் வாங்கப்பட்டனர். அதில் அதிகபட்சமாக சென்னை அணியின் கெப்டன் எம்.எஸ் டோனி 12 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர்களின் சராசரி சம்பளத் தொகை 5.50 கோடியாகும்.

மேற்குறிப்பிட்டுள்ள புள்ளி விபரங்களில் இருந்து 35 வயதைக் கடந்த வீரர்கள் குறைந்த அளவில் வாங்கப்பட்டாலும் அதிக சராசரி சம்பளத் தொகையை பெற்றுள்ளார்கள். மேலும் 20, 30, 35 வயது என வீரர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு கொடுக்கப்படும் சராசரி சம்பளத் தொகையும் படிப்படியாக உச்சம் தொடுகிறது.

இதை வைத்து பார்க்கும்போது ஐ.பி.எல் தொடரில் திறமையின் அடிப்படையில் பல்வேறு வயதை கொண்ட வீரர்கள் வாங்கப்பட்டாலும், அவர்களின் உண்மையான மதிப்பு என்பது அவர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க உயர்கிறது என்பதை இதிலிருந்து தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. இதன் வாயிலாக பழமைக்கு மதிப்பு அதிகம் என்ற பழமொழியின் படி இளம் வீரர்களுக்காக கோடிகளை கொட்டும் ஐ.பி.எல் தொடரும் விதிவிலக்கல்ல என்பது நிரூபணமாகிறது.

 

Leave a Reply

Your email address will not be published.