‘எக்ஸ்பையரான வீரர்களை வைத்துக் கொண்டு சி.எஸ்.கே அணியால் இந்தாண்டு சம்பியனாக முடியாது’ – சி.எஸ்.கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த பதான்

Cricket

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை மும்பையில் ஆரம்பமாகிறது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராக துவங்கியுள்ளன. இந்த வருடம் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த தொடர் துவங்கும் மும்பை நகரில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக நடப்பு சாம்பியனாக இருக்கும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கோப்பையை தக்க வைப்பதற்காக மும்பை, பெங்களூரு போன்ற இதர அணிகளை காட்டிலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே குஜராத் மாநிலம் சூரத் நகரில் தீவிர வலை பயிற்சியை தொடங்கியது. அதில் கேப்டன் எம்எஸ் தோனி, ராபின் உத்தப்பா போன்ற முக்கிய வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில் ருதுராஜ் கைக்வாட், ரவீந்திர ஜடேஜா போன்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த வீரர்களும் இணைந்து வருகிறார்கள்.

இதனால் ஐபிஎல் 2022 தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் 5-வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காலம் கடந்த வீரர்களை வைத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைப்பது சந்தேகம் என முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

‘இவை அனைத்தும் வெறும் ஒரு கேள்வியில் தான் உள்ளது. அதாவது எம்எஸ் தோனி, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா போன்ற சென்னை அணியின் முக்கிய வீரர்கள் சமீப காலங்களில் எத்தனை போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்கள்? மேலும் அவர்கள் தற்போது எந்த அளவிலான பார்மில் உள்ளார்கள்’ என கேள்வி எழுப்பினார். அவர் கூறுவது போல சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி இந்தியாவிற்காக கடந்த 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை விளையாடினார். அதன்பின் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வரும் நிலையில் கடைசியாக கடந்த ஐபிஎல் 2021 தொடரின் பைனலில் விளையாடினார்.

ஏற்கனவே கடந்த சில வருடங்களாக மோ சமான பார்மில் இருந்து வரும் அவர் அதன்பின் சயீத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை. அவரை போலவே சென்னையின் முக்கிய வீரர்களாக இருக்கும் அம்பத்தி ராயுடு மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோரும் கடந்த வருடம் ஐபிஎல் தொடருக்கு பின் வெறும் ஒரு சில உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடினார்கள்.

பொதுவாகவே தொடர்ச்சியாக விளையாடி வரும் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் கூட சில நேரங்களில் பெரிய ரன்களை அடிக்க முடியாமல் திணறுகிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் சென்னை அணியின் முக்கியமான நம்பிக்கை நட்சத்திர வீரர்களாக கருதப்படும் இவர்கள் தொடர்ச்சியாக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாமல் சுமாரான பார்மில் இருப்பதால் சென்னை அணி கோப்பையை தக்க வைப்பது மிகவும் கடினம் என இர்பான் பதான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.