சர்வதேச கிரிக்கெட் பேரவையானது வருடாந்த அணிகளின் தரவரிசை பட்டியலை வெளியிட்டதற்கமைய டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணி 119 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவுஸ்திரேலிய அணி இவ்வாறு மீண்டும் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
பெட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஆஷஸ் தொடரை 4 – 0 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானை 1-0 என வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது. இதனால் டெஸ்ட் தரவரிசையிலும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலிலும் அவுஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
2019 மே மாதம் முதல் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களின் அடிப்படையில் இந்தப் புதிய தரவரிசை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் அணிகளின் தரவரிசையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி 125 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதேவேளை, இருபதுக்கு 20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி 270 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.