‘டோனியும், சி.எஸ்.கே நிர்வாகமும் தவறு செய்துவிட்டது’ – ஷேன் வொட்சன் குற்றச்சாட்டு

Cricket

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமை விடயத்தில் அணி நிர்வாகம் மற்றும் எம்.எஸ். டோனி செய்த தவறு குறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ஷேன் வொட்சன் மனவருத்தம் அடைந்துள்ளார். 

நடப்பு ஐ.பி.எல் தொடரில் நடப்பு சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட 90 சதவீதம் ப்ளேஓப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. 10 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள அந்த அணி, மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ப்ளேஓப் செல்வது கடினம். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சொதப்பலுக்கு காரணம் ரவீந்திர ஜடேஜாவுக்கு தலைமை பொறுப்பு கொடுத்தது தான். பின்னர் அதனை கடைசி நேரத்தில் டோனிக்கு மீண்டும் கொடுத்தனர். ஆனால் நிலைமை கையைவிட்டு சென்ற பின்னர் டோனியால் கூட அணி ப்ளேஓப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை. 

இந்நிலையில் இதுகுறித்து ஷேன் வொட்சன் பேசியுள்ளார். அதில், ஜடேஜா தான் தலைவர் என நான் அறிந்தவுடன் அதிர்ச்சியில் ஆழ்ந்தேன். ஏனென்றால் அணியிலும், களத்திலும் டோனிக்கு கிடைக்கும் மரியாதை அனைவருக்கும் தெரியும். அதனை ஜடேஜா இப்படி சமாளிக்க முடியாமல் போனது என்பது எனக்கே கவலையாக தான் இருந்தது. எனக்கும் அதே நிலைமைதான், ராஜஸ்தான் அணியின் தலைமை பதவியில் இருந்து நானும் விலகியுள்ளேன். அழுத்தமான சூழலில் பதவி விலகுவது எப்படி வலிக்கும் என்பதை நானும் அறிவேன். இந்த முடிவை எடுத்ததற்காக ஜடேஜாவுக்கு பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும். 

ஆனால் ஜடேஜாவால் சோபிக்க முடியாமல் போனதற்கு சில காரணங்களும் உண்டு. டோனியை மையப்படுத்தி தான் ஒட்டுமொத்த அணியும் கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் மாற்றலாம். இன்னொரு சம்பியன் கிண்ணத்தையும் வெல்லலாம். ஆனால் அவருக்காக உருவாக்கப்பட்டதை ஜடேஜாவால் எப்படி சமாளிக்க முடியும். அந்த வகையில் டோனி மற்றும் சி.எஸ்.கே நிர்வாகம் தவறு செய்துவிட்டது. என வொட்சன் மனவருத்தம் அடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.