சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் அணித்தலைவரான ரவீந்திர ஜடேஜா நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து உபாதை காரணமாக விலகுவதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்தது.
நடப்பு ஐ.பி.எல் தொடர் ஆரம்பமாக முன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பொறுப்பை மஹேந்திர சிங் டோனி, ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். அணிக்கு தலைமை வகித்த ஜடேஜா முதல் 8 ஆட்டங்களில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுக் கொடுத்தார். மேலும் அவரது ஃபார்மும் கேள்விக்குள்ளானது. இதையடுத்து தலைமை பொறுப்பிலிருந்து விலகிய ஜடேஜா மீண்டும் டோனியிடமே தலைமை பொறுப்பை ஒப்படைத்தார்.
இந்நிலையில், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்கள10ர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின்போது அவருக்கு உபாதை ஏற்பட்டது. இதனால், டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. இதன் காரணமாக நடப்பு சீசன் முழுவதிலும் அவர் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியானது.
இந்தத் தகவலை உறுதி செய்யும் வகையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு உத்தியோகபூர்வமாக அறிவிப்பினை வெளியிட்டது. மருத்துவ அறிவுறுத்தலின் பேரில் அவர் விலகுவதாக அணி நிர்வாகம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.