அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் மூவகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நேற்று முன்தினம் கொழும்பு உட்பட நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடம்பெற்ற பதற்ற நிலைமையினை அடுத்து ஆஸி. அணியின் சுற்றுப்பயணம் நடைபெறுவதில் கேள்வி எழுந்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேச தொடர், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் மற்றும் இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸி. கிரிக்கெட் அணி அடுத்த மாதம் முதல் வாரம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் குறித்த தொடர் மூலம் இலங்கைக்கு பெருமளவில் டொலர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான ஒரு நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட அசாதாரண சுழ்நிலையை அடுத்து ஆஸி. கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் இலங்கையின் நிலைமை குறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அடுத்துவரும் நாட்களில் நாட்டு நிலைமைகளை பொறுத்தே குறித்த தொடர் நடைபெறுமா இல்லையா என்பது உறுதியாகும்.