வாய்ப்புக்காக 2 ஆண்டுகளாக காத்திருக்கும் சச்சின் மகன்.. புறக்கணிக்கும் ரோஹிட் – காரணத்தை விளக்கினார் மும்பை கோச் மஹேல

Cricket

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு அணியில் வாய்ப்பு கொடுக்காமை தொடர்பில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மஹேல ஜெயவர்த்தன கருத்து தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐ.பி.எல் தொடரில் 5 தடவைகள் சம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி எந்த ஒரு செய்யாத அளவுக்கு படுமோசமாக சொதப்பி வருகிறது. தொடர்ந்து 8 தோல்விகளை பெற்றுவிட்ட பின்னர் தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. ப்ளேஓப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் 16 புள்ளிகளை பெற வேண்டும். அந்த வகையில் மும்பை அணி ஏற்கனவே ப்ளேஓப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தவறவிட்டு விட்டது. மும்பை அணியின் தோல்விகளுக்கு அணித்தலைவர் ரோஹிட் சர்மாவின் பிடிவாதம் கூட காரணமாக பார்க்கப்படுகிறது. 

மும்பை அணியில் துடுப்பாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், பந்துவீச்சு தான் பெரும் பிரச்சினையாக உள்ளது. டேனியல் சாம்ஸ் ஒவ்வொரு போட்டியிலும் 40 ஓட்டங்களை வாரி வழங்கும் போதும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கின்றனர். ஆனால் வாய்ப்புக்காக 2 ஆண்டுகளாக காத்திருக்கும் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஒரு வாய்ப்பை கூட இன்னும் கொடுக்கவில்லை. மெகா ஏலத்தில் ரூ.30 இலட்சத்திற்கு வாங்கப்பட்ட அர்ஜுன் டெண்டுல்கரின் தேவை இருக்கும் போதும், ரோஹிட் சர்மா அவரை புறக்கணிக்கிறார். 

இந்நிலையில் சச்சின் மகனுக்கு ஏன் வாய்ப்பே கிடைக்கவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார். ‘அணியில் அனைவருக்குமே வாய்ப்பு கிடைக்கும். அணியின் காம்பினேஷன் மற்றும் வெற்றிகள் தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு காம்பினேஷனாக முயற்சி செய்து வருகிறோம். தற்போது தான் முதல் வெற்றியை பெற்றுள்ளோம். அதே நம்பிக்கையில் மிகவும் சிறந்த வீரர்களை களத்திற்கு கொண்டு வருகிறோம். அர்ஜுன் டெண்டுல்கரும் அதில் ஒருவராக இருந்தால் நிச்சயம் அவர் குறித்து பரிசீலிப்போம். எனினும் அனைத்து காம்பினேஷன்களை வைத்து தான் இறுதி முடிவுகளை எடுக்கிறோம்.’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published.