ஐ.பி.எல் தொடரில் விளையாடவிருந்த சவுத் ஆபிரிக்க வீரர்களுக்கு ஏற்பட்ட சோகம் !!

Cricket

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள தென்னாபிரிக்க அணியின் குழாம் அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த குழாமில் ஐ.பி.எல் தொடரில் விளையாடவுள்ள 8 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் அன்ரிச் நோர்கியா, மகாலா ஆகிய இருவரும் உபாதை காரணமாக இடம்பெறவில்லை.  பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரானது, ஐ.பி.எல் ஆரம்பிக்க மூன்று நாட்களுக்கு முன்பு நிறைவுபெறுகிறது. இதனால் ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ள ககிஸோ ரபாடா, லுங்கி என்கிடி, வான் டர் டைசென், டேவிட் மில்லர், குயிண்டன் டி கொக், எய்டன் மார்க்ரம், டுவைன் பிரிடோரியஸ், மார்கோ ஜென்சென் ஆகிய 8 வீரர்களும் ஐ.பி.எல் தொடக்க ஆட்டங்களில் விளையாட மாட்டார்கள் எனத் தெரிகிறது.

ஐ.பி.எல் தொடரில் விளையாடும் அனைத்து வீரர்களும் மூன்று நாள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் கொரோனா தடுப்பு வளையத்துக்குள் அவர்களால் நுழைய முடியும். இதன் காரணமாக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் வீரர்களால் ஐ.பி.எல் தொடரின் ஆரம்ப ஆட்டங்களில் இடம்பெறுவது கடினம். மேலும் மார்ச் 31 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் என்ன நடக்கப் போகிறது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

ஐ.பி.எல் தொடரா, டெஸ்ட் தொடரா இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பதை வீரர்களே முடிவு செய்துகொள்ளலாம் என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. வீரர்களின் முடிவைக் கொண்டு அவர்கள் எதற்கு விசுவாசமாக இருக்கிறார்கள் என்று தெரிந்துவிடும் என தென்னாபிரிக்க டெஸ்ட் அணியின் தலைவர்; டீன் எல்கர் கூறியுள்ளார். ஒருநாள் தொடர் முடிந்த பிறகு டெஸ்ட்டில் விளையாடாத வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் கலந்துகொள்ளலாம் என தென்னாபிரிக்க கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் விக்டர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

எனினும் ரபாடா, என்கிடி, வான் டர் டைசென், மார்க்ரம், ஜென்சென், நோர்கியா ஆகிய 6 டெஸ்ட் வீரர்கள், டெஸ்ட் தொடரில் இடம்பெறுவார்களா அல்லது ஐ.பி.எல் தொடரை தேர்வு செய்வார்களா என்ற கேள்விக்கான விடை இதுவரை தெரியவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published.