Video | அந்த வெறி இன்னும் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு.. பயிற்சியில் ஸ்டம்பை இரு துண்டுகளாக உடைத்த நம்ம நடராஜன். தமிழக ரசிகர்கள் மகிழ்ச்சி

Cricket

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் ஐ.பி.எல் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதற்காக ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். 2017ஆம் ஆண்டு பஞ்சாப் அணியால் சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர் அதன் பின்னர் ஐதராபாத் அணியில் இணைந்தார். அதிலிருந்து அந்த அணிக்காகத் தொடர்ச்சியாக விளையாடிவருகிறார்.

துல்லியமான யார்க்கர் பந்துவீச்சால் எதிரணியினரை திக்குமுக்காட வைப்பதைத் தனது பலமாகக் கொண்டுள்ள அவர், ஜஸ்ப்ரீத் பும்ராவுக்குப் பிறகு சிறப்பாக யார்க்கர் வீசக்கூடிய பந்துவீச்சாளராக அறியப்படுகிறார். ஐபிஎல்லில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துகொண்ட நடராஜனுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி வாயிலாக சர்வதேசக் கிரிக்கெட்டில் நுழைந்த அவர், ஒரே தொடரில் மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் எனும் சிறப்பையும் பெற்றார்.

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல்லுக்கு நடராஜன் தீவிர பந்துவீச்சுப் பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். இது தொடர்பான வீடியோவை ஐதராபாத் அணி வெளியிட்டுள்ளது. நடராஜனின் பந்துவீச்சில் ஸ்டெம்ப் இரண்டாக உடையும் அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி விளையாடும் முதல் போட்டி வரும் 29ஆம் தேதி நடக்கவுள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐதராபாத் எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published.