2011ஆம் ஆண்டு ஐ.பி.எல் அறிமுகமாகி 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் 2022 ஐ.பி.எல் லில் களமிறங்கவுள்ள பிரபல வெளிநாட்டு வீரர்

Cricket

2022ஆம் ஆண்டு நடைபெறுகின்ற 15ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகிறது. இதுவரையில் 14 தொடர்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அதிக தடவைகள் சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி காணப்படுகிறது. இந்தமுறை மொத்தம் 10 அணிகள் களம் காண உள்ளன. இன்னொரு கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த தொடரில் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி வீரர் ஒருவர் களம் காண்கிறார்.

ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட் 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்கு திரும்பியுள்ளார். இம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களம் இறங்குகிறார். கடைசியாக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் விளையாடிய அவருக்கு, அந்த தொடர் சிறப்பாக அமையவில்லை. டெல்லி டேர்டேவில்ஸ் அணிக்காக 3 போட்டிகளில் மட்டுமே களமிறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 3 போட்டிகளிலும் சேர்த்து 22 ரன்கள் எடுத்திருந்தார்.

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கு ஏலத்தில் மிகப்பெரிய டிமாண்ட் இருந்தது. கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 2 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த மேத்யூ வேட், ஐபிஎல் ஏலத்தில் ஏலம் எடுக்கப்பட்டவுடன், கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக விலகினார். ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியில் களமிறங்கும் மேத்யூ வேட், 11 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்துள்ள வாய்ப்பு சரியாக பயன்படுத்திக் கொள்ள காத்திருக்கிறார்.

மேத்யூ வேட், அண்மைக்காலமாக ஆஸ்திரேலிய அணிக்கு மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் உலகக்கோப்பை வெற்றி பெற்றபோது, பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் 19வது ஓவரில் 3 சிக்சர்களை விளாசி அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார். அதுவும் பாகிஸ்தானின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் இந்த 3 சிக்சர்களையும் மேத்யூ வேட் விளாசியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.