ஆஸி. வின் பலத்தாலும், பாகிஸ்தானின் புண்ணியத்தாலும் டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் மூன்றாமிடத்திற்கு முன்னேறிய டீம் இந்தியா

Cricket

ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஒரு தொடராக நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டெஸ்டை 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது அவுஸ்திரேலிய அணி. பாகிஸ்தான் அணி இவ்வாறு தோல்வியை தழுவியை தழுவியதை தொடர்ந்து டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட், லாகூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 391 ரன்களும் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 268 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 60 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா 104 ரன்களும் வார்னர் 51 ரன்களும் எடுத்தார்கள். இந்தத் தொடரில் 3 டெஸ்டுகளில் இரு சதங்கள், 2 அரை சதங்களுடன் 496 ரன்கள் எடுத்துள்ளார் கவாஜா.

3-வது டெஸ்டை வென்று தொடரைக் கைப்பற்ற பாகிஸ்தான் அணிக்கு 351 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை அடைய பாகிஸ்தான் அணிக்கு 121 ஓவர்கள் வழங்கப்பட்டன. 4-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடி 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்தார்கள். அப்துல்லா ஷஃபிக் 27, இமாம் உல் ஹக் 42 ரன்களும் எடுத்துக் களத்தில் இருந்தார்கள். கடைசி நாளில் பாகிஸ்தான் வெற்றி பெற 278 ரன்கள் தேவைப்பட்டன.

92.1 ஓவர்களில் 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லயன் 5, கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். 3-வது டெஸ்டை 115 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா, டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியுள்ளது. 2016-க்குப் பிறகு முதல்முறையாக வெளிநாட்டில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. மேலும் ஆசியாவில் 2011-க்குப் பிறகு வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகனான பேட் கம்மின்ஸும் தொடர் நாயகனாக உஸ்மான் கவாஜாவும் தேர்வானார்கள்.

Leave a Reply

Your email address will not be published.