கிரிக்கெட் உலகிலும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் விளையாடுவது ஒரு சாம்பிரதாயமாக காணப்படுகிறது. கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாடுகளிலும் குறைந்தது ஒரு சகோதர ஜோடிகளாவது காணப்படும். சில நாடுகளில் அது ஏராளமாக காணப்படுகிறது. சில நாடுகளில் கழகங்களில் சகோதரர்கள் கிரிக்கெட் விளையாடினாலும் அவர்களில் ஒருவர் மாத்திரமே சர்வதேச போட்டியில் விளையாடியிருப்பார்கள். அந்த வகையில் நாம் இந்த இடத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சகோதரர்களாக விளையாடியவர்கள் குறித்து கவனம் செலுத்துவோம்.
கம்ரான் அக்மல் – உமர் அக்மல் (பாகிஸ்தான்)
38 வயதுடைய கம்ரான் அக்மல் கடந்த 2002ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் சர்வதேச அறிமுகம் பெற்றார். கம்ரான் அக்மலின் தம்பியான 30 வயதுடைய உமர் அக்மல் கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்டார்.
ப்ரெண்டன் மெக்கலம் – நதன் மெக்கலம் (நியூசிலாந்து)
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவராக ப்ரெண்டன் மெக்கலம் கடந்த 2002ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்டார். இவருக்கு வயது தற்போது 39 ஆகிறது. இவரது அண்ணான நதன் மெக்கலம் கடந்த 2007ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியில் அறிமுகம் பெற்றார். தற்போது நதன் மெக்கலமுக்கு வயது 40 ஆகிறது. இவர்கள் இருவரிலும் தம்பியே முதலில் சர்வதேச அறிமுகம் பெற்றார்.
ஷோன் மார்ஸ் – மிட்செல் மார்ஸ் (அவுஸ்திரேலியா)
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான 37 வயதுடைய ஷோன் மார்ஸ் கடந்த 2008ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகம் பெற்றார். அவரது தம்பியான 29 வயதுடைய சகலதுறை வீரர் மிட்செல் மார்ஸ் கடந்த 2011ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகம் பெற்றார்
இர்பான் பதான் – யூசுப் பதான் (இந்தியா)
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அதிகமான போட்டிகளில் ஜோடியாக விளையாடிய பெருமை இவர்கள் இருவரையும் சாரும். 36 வயதான இர்பான் பதான் 2003ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார். அவரது அண்ணான 38 வயதுடைய யூசுப் பதான் 2007ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இதில் அண்ணனை விட தம்பியே முன்னதாக சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹார்டிக் பாண்டியா – குர்ணல் பாண்டியா
தற்கால கிரிக்கெட் உலகில் பிரபலமான சகோதரர்களில் ஒரு ஜோடியாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹார்டிக் பாண்டியா – குர்ணல் பாண்டியா ஜோடி காணப்படுகிறது. இருவரும் மிகவும் வேடிக்கையான முறையில் நடந்துகொள்வதால் கிரிக்கெட் உலகில் இவர்களுக்கு பெருமளவான இரசிகர்கள் பட்டாளம் காணப்படுகிறது. தம்பியான ஹார்டிக் பாண்டியா கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் பெற்றார். அண்ணனான குர்ணல் பாண்டியா கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகம் பெற்றார்.
மைக்கல் ஹஸி – டேவிட் ஹஸி (அவுஸ்திரேலியா)
அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்களான மைக்கல் ஹஸி மற்றும் டேவிட் ஹஸி ஆகியோர் ஒரே போட்டியில் விளையாடிய சர்வதேச வீரர்களாக காணப்படுகின்றனர். 45 வயதுடைய மைக்கல் ஹஸி 2004ஆம் ஆண்டு சர்வதேச அறிமுகம் பெற்றார். அவரது தம்பியான 43 வயதுடைய டேவிட் ஹஸி 2008 இல் அறிமுகம் பெற்றார். தற்போது இன்னும் ஏராளமான சகோதர ஜோடிகள் கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள்.
இங்கிலாந்தில் சாம் கரன் – டொம் கரன் ஜோடி, மேற்கிந்திய தீவுகளில் டெரன் பிராவோ – டுவைன் பிராவோ. தென்னாபிரிக்காவில் மோர்னி மோர்கல் – அல்பி மோர்கல் ஜோடி, பங்களாதேஷில் தமீம் இக்பால் – நபீஸ் இக்பால், அயர்லாந்தில் கெவின் ஓ பிரைன் – நைல் ஓ பிரைன் ஜோடி என இன்னும் ஏகப்பட்ட சகோதர ஜோடிகள் உள்ளன.