‘இந்த ஆடுகளம் பந்துவீச்சிற்கே சாதகமாக இருந்தது’ – சி.எஸ்.கே கேப்டன் ஜடேஜா வெளிப்படை பேச்சு

Cricket

ஐ.பி.எல் 15ஆவது சீசன் நேற்று ஆரம்பமானது. முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பனியின் தாக்கம் கருதி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் வரிசை வீரர்கள் யாருமே பெரிய ஸ்கோர் அ டிக்கவில்லை. இறுதியில் 131 ஓட்டங்களை மட்டுமே சி.எஸ்.கே அணி பெற்றுக்கொண்டது. இதன்பின் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான ரஹானே 44 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா (21), சாம் பில்லிங்ஸ் (25) மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் (20) ஆகியோரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம், 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தநிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா, ஆடுகளத்தின் பணி படர்ந்தது போட்டியையே மொத்தமாக மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரவீந்திர ஜடேஜா பேசுகையில், ‘பணி இந்த தொடரில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என கருதுகிறேன். டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சையே தேர்வு செய்யும். முதல் 6-7 ஓவர்களில் ஆடுகளம் பந்துவீச்சிற்கே சாதகமாக இருந்தது, ஆனால் நேரம் செல்ல செல்ல ஆடுகளம் சற்று பேட்டிங்கிற்கும் கை கொடுத்தது. எங்களால் முடிந்தவரை வெற்றி பெற போராடினோம். ஒவ்வொரு வீரர்களும் மிக சிறப்பாக பந்துவீசினர், குறிப்பாக டூவைன் பிராவோ மிக சிறப்பாக பந்துவீசினார்’ என்று தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.