2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஐ.பி.எல் தொடரை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 81 ரன்களும், ரோஹித் சர்மா 41 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ப்ரித்வி ஷா மற்றும் டிம் செய்பர் ஆகியோர் நல்ல துவக்கம் கொடுத்தனர்.
இதன்பின் களத்திற்கு வந்த மந்தீப் சிங் (0), ரிஷப் பண்ட் (1) மற்றும் ரோவ்மன் பவல் (0) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் டெல்லி அணி 72 ரன்களுக்கே 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பிறகு களத்திற்கு வந்த ஷர்துல் தாகூர் 11 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். இதனையடுத்து கூட்டணி சேர்ந்த அக்ஷர் பட்டேல் – லலித் யாதவ் ஜோடி மும்பை இந்தியன்ஸின் பந்துவீச்சை சிதறடித்து அசால்டாக ரன் குவித்தது.
பாரபட்சம் இல்லாமல் பும்ராஹ் உள்பட அனைத்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சிதறடித்த இந்த ஜோடி, சாத்தியமில்லை என கருதப்பட்ட வெற்றியை 18.2 ஓவர்களில் சாத்தியமாக்கி, டெல்லி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளது. லலித் யாதவ் 48 ரன்களுடனும், அதிரடியாக விளையாடிய அக்ஷர் பட்டேல் 17 பந்துகளில் 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.