இலங்கை அணியின் பானுக ராஜபக்ஷ, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒடேன் ஸ்மித் ஆகியோரின் அதிரடி ஆட்டம் காரணமாக ஆர்.சி.பி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
2022 ஐ.பி.எல் தொடரின் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், பாப் டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், மாயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மாயன்க் அகர்வால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
பெங்களூர் அணியில் அதிகபட்சமாக டூபிளசிஸ் 88 ரன்களும், விராட் கோலி 41 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 32 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான மாயன்க் அகர்வால் 32 ரன்களும், ஷிகர் தவான் 43 ரன்களும் எடுத்து கொடுத்தனர்.
மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய பனுகா ராஜபக்சே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் வந்த ராஜ் பவா (0) மற்றும் லிவிங்ஸ்டன் (19) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதனையடுத்து கூட்டணி சேர்ந்த ஷாருக் கான் – ஓடின் ஸ்மித் ஜோடி பெங்களூர் அணியின் வெற்றி கனவை கலைக்கும் வகையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
குறிப்பாக முகமது சிராஜ் வீசிய போட்டியின் 18வது ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடிய ஓடின் ஸ்மித், ஒரே ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். ஓடின் ஸ்மித் 8 பந்துகளில் 25 ரன்களும், ஷாருக் கான் 24 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19வது ஓவரிலேயே இமாலய இலக்கை அசால்டாக எட்டிய பெங்களூர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.