‘குல்தீப் யாதவ் கொல்கத்தா அணியில் வேலைக்காரண் போல் வழிநடத்தப்பட்டார். கே.கே.ஆர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட போது தான் அவருக்கு நிம்மதி கிடைத்தது’ – கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய பயிற்றுவிப்பாளர்

Cricket

2022ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய போட்டியில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அசத்தல் வெற்றியை பெற்றிருந்தது. இந்த போட்டியில், டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், ரோஹித் ஷர்மா, அன்மோல் ப்ரீத் சிங், பொல்லார்ட் ஆகிய மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதினை தட்டிச் சென்றார். கடந்த இரண்டு சீசன்களில், கொல்கத்தா அணிக்காக ஆடி வந்த குல்தீப் யாதவிற்கு, மிக குறைவான போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே, இந்திய அணியிலும் குல்தீப் யாதவிற்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. சமீபத்தில் மட்டும் ஒரே ஒரு தொடரில் அவர் இந்திய அணிக்காக ஆடி இருந்தார். இதனையடுத்து, இந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தில், டெல்லி அணி அவரை 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது அவர் களமிறங்கியுள்ள முதல் போட்டியிலேயே முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருதினையும் தட்டிச் சென்று, தன்னுடைய திறனை நிரூபித்துக் காட்டியுள்ளார். இந்நிலையில், குல்தீப் யாதவின் பயிற்சியாளர் கபில் பாண்டே, சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

‘குல்தீப் யாதவ் நன்றாக தான் செயல்பட்டு வந்தார். ஆனால், அவருக்கான வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டு வந்தது. கொல்கத்தா அணி அவரை விடுவித்ததும், குல்தீப் உட்பட நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். அந்த அணியில், ஒரு வேலைக்காரன் போல தான் குல்தீப் நடத்தப்பட்டார் என நாங்கள் உணர்ந்தோம். அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், கொல்கத்தா அணி விடுவித்தால் போதும் என்று தான் இருந்தது.

9 முதல் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய குல்தீப், இரண்டு கோடி ரூபாய்க்கு தான் ஏலம் போனார். கொல்கத்தா அணி காரணமாக, பொருளாதார ரீதியாகவும் குல்தீப் பாதிக்கப்பட்டுள்ளார். குறைவான தொகைக்கு ஏலம் போவது, தவறான ஒன்று கிடையாது. நீ விளையாடிக் கொண்டே இரு. கடினமாக உழைத்தால் போதும். பணம் சம்பாதிப்பதை விட, நாட்டுக்காக ஆடுவதே உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும் என குல்தீப்பிடம் அறிவுறுத்தினேன்.

குல்தீப் என்னிடம், ‘என்ன பிரச்சனை என்பது எனக்கு தெரியவில்லை. எனக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவே இல்லை. கொல்கத்தா அணியின் திட்டம் என்ன என்பதும் எனக்கு விளங்கவில்லை’ என ஒருமுறை குறிப்பிட்டார். உண்மையில், கேப்டனும் அணி நிர்வாகமும் குல்தீப் மீதான நம்பிக்கையை இழந்து விட்டது. அந்த மனச் சோர்வு, குல்தீப்பை அதிகம் வாட்டி எடுத்தது’ என கபில் பாண்டே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.