‘மும்பை அணி என்னை ஏலத்தில் எடுப்பதற்கு முன்பு வரை என் வங்கி கணக்கில் 1000 ரூபாய் கூட இல்லை’ உருக்கமாக பேசிய ஹார்டிக்

Cricket

2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் 4-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி 19.4 ஓவரில் 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் கேப்டனான முதல் போட்டியே வெற்றியுடன் ஹர்திக் பாண்ட்யா ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில் தனது ஆரம்ப காலகட்டத்தில் கஷ்டப்பட்டது குறித்து ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்துள்ளார். அதில், ‘எனது வாழ்கையின் ஆரம்பக் கட்டங்களில், மும்பை இந்தியன்ஸ் அணி என்னை ஏலத்தில் எடுப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்பு வரை என் வங்கி கணக்கில் 1000 ரூபாய் கூட இல்லை’ என உருக்கமாக பேசியுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்ட்யாவை ஏலத்தில் எடுத்தது. அந்த அணி பல போட்டிகளில் வெற்றி பெற ஹர்திக் பாண்ட்யா முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

அதனால் அந்த அணியின் நட்சத்திர வீரராக ஹர்திக் பாண்டியா மாறினார். இதனை அடுத்து 2016-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்து அசத்தினார். நீண்ட ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஹர்திக் பாண்ட்யாவை, இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலத்துக்கு முன்பு 15 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மேலும் அவருக்கு கேப்டன் பொறுப்பும் கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.