ஒரு வருட தடை முதல் பாலியல் குற்றச்சாட்டு வரை.. மறைந்த ஜாம்பவான் வோர்னின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சர்ச்சைகள்

Cricket

கிரிக்கெட் உலகின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ஷேன் வோர்ன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீர் மாரடைப்பு காரணமாக தாய்லாந்தில் வைத்து தனது 52ஆவது வயதில் உலகை விட்டும் பிரிந்தார். 145 டெஸ்ட் போட்டிகளில் 702 விக்கெட்களை வீழ்த்தி ஒரு ஜாம்பவானாக திகழ்ந்த ஷேன் வோர்ன், கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை படைத்ததற்கு நிகராக, அதிகமான சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். அதில் அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்ட மூன்று முக்கிய சர்ச்சைகள் இவை.

ஒரு வருட தடை

2003ஆம் ஆண்டு ஐ.சி.சி உலகக்கிண்ண தொடர் ஆரம்பமாகவிருந்த சமயத்தில், அவரின் உடற்தகுதி பெரிய பிரச்சினையாக பார்க்கப்பட்டது. அவர் சரியாக உடற்பயிற்சி செய்யவில்லை, பிட்னஸ் இல்லை எனக் கூறி அணியிலிருந்து நீக்கப்பட வாய்ப்பு அதிகமாக இருந்தது. அந்த சமயத்தில் உடலை குறுகிய காலத்திற்குள் கட்டுக்கோப்பாக மாற்ற, சில தடை செய்யப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டார். இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையால் ஒரு வருடம் தடைக்கு உள்ளானார்.

அந்த சமயத்தில் அவர் கிரிக்கெட் வர்ணனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். அவரின் கிரிக்கெட் வர்ணனை ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால், அதன்பிறகு 2007வரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டே வர்ணனை பணியிலும் ஈடுபட்டு வந்தார். அடுத்து கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அதனை முழு நேரப் பணியாக மாற்றிக்கொண்டார்.

கேப்டனுடன் மோதல்

ஷேன் வோர்ன் 1999ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலக கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்து வந்தார். இவரது பந்தை எதிர்கொள்ள அனைத்து முன்னணி பேட்ஸ்மேன்களும் தடுமாறி வந்தனர். அந்த சமயத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்று அவுஸ்திரேலிய அணி கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. அப்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது அவுஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக், வோர்னை அணியில் இருந்து நீக்கினார். அதற்கான காரணத்தையும் ஸ்டீவ் வாக் விளக்கவில்லை. 

இதனால் அதிருப்தியில் இருந்த ஷேன் வோர்ன், தொடர்ந்து ஸ்டீவ் வாக்குடன் மோதல் போக்கில் இருந்து வந்தார். இதுகுறித்து 2016ஆம் ஆண்டில் கிரிக்கெட் வர்ணனை செய்தபோது பேசிய வோர்ன், ‘ஸ்டீவ் வாக் ஒரு சுயநலம் பிடித்த கிரிக்கெட்டர்’ என கடுமையாக விமர்சித்திருந்தார்.

பாலியல் குற்றச்சாட்டு

2000ஆம் ஆண்டில் ஷேன் வோர்ன் மீது ஒரு பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தாதி ஒருவர், ‘எனக்கு வோர்ன் தொடர்ந்து பாலியல் ரீதியான மெசேஜ்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்’ என பகிரங்கமாக அறிவித்து ஆதாரத்தையும் வெளியிட்டார். அப்போது வோர்னுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருந்தன. 

இந்த செய்தி குறித்து விளக்கமளித்த வோர்ன், ‘போதையில் இருந்தபோது அப்படி அனுப்பியிருக்கலாம்’ எனத் தெரிவித்தார். இதனால் அதிருப்தியடைந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வோர்னின் துணைக் கேப்டன் பதவியை பறித்தது. அதன்பிறகு ஒரு வீரராக மட்டுமே அணியில் இடம் பிடித்து வந்தார்.

Leave a Reply

Your email address will not be published.