2022 இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 7ஆவது போட்டியில் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் – சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 1 ரன் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். மறுமுனையில் ராபின் உத்தப்பா சென்னை அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுத்தார். பவர் பிளேவில் லக்னோ பந்து வீச்சாளர்களை திணறடித்த அவர் பவுண்டரிகளாக விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 25 பந்துகளில் அரைசதம் அ டித்தார்.
அவர் 27 பந்துகளில் 50 ரன்கள் அ டித்து வெளியேறினார். அதன் பிறகு மொயின் அலியும் பந்துகளை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிட்டார். அவர் 22 பந்துகளில் 35 ரன்கள் குவித்து அவேஷ் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் துபே மற்றும் ராயுடு ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி மீண்டும் லக்னோ பந்துவீச்சாளர்களுக்கு சவால் அளித்தனர். இருவரும் அடுத்தடுத்து சிக்சர் மற்றும் பவுண்டரிகளாக அடித்து அணியின் ரன் கணக்கை உயர்த்தினார். கடைசி நேரத்தில் களமிறங்கிய டோனி தான் சந்தித்த முதல் 2 பந்துகளிலே பவுண்டரிகள் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.
இதன் மூலம் சென்னை அணி 211 ரன்கள் என்ற இமாலய இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்தது. லக்னோ அணியில் தொடக்க வீரராக ராகுல், டி காக் களமிறங்கினர். சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்த இவர்கள் அணியின் ரன் கணக்கை மளமளவென உயர்த்தினர். பிராவோ பந்துவீச்சில் டி காக் கொடுத்த கேட்சை மொயின் அலி தவறவிட்டார். லக்னோ அணி 9 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 90 ரன்கள் குவித்து இருந்தது. பின்னர் ராகுல், டி காக் ஜோடியை சென்னை அணியின் பிரிட்டோரியஸ் பிரித்தார். பிரீடோரிஸ் பந்துவீச்சில் ராகுல் 40 ரன்களில் வெளியேறினார்.
அதை தொடர்ந்து வந்த மணீஷ் பாண்டே 5 ரன்களில் நடையை கட்டினார். சிறப்பாக விளையாடிய டி காக் 45 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த போது பிரிட்டோரியஸ் பந்துவீச்சில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் எவின் லீவிஸ் தனது ஆக்ரோஷ ஆட்டத்தை தொடங்கினார். சிறப்பாக விளையாடிய அவர் 23 பந்துகளில் அரைசதம் அ டித்து அசத்தினார். இறுதியில் லக்னோ அணி 19.3 ஓவர்களில் 211 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றது.