தோல்வியின் பின்னர் ரோஹிட் சர்மா வேதனை…
2022ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் கடந்த மாதம் 26-ஆம் திகதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
டேனியல் சாம்ஸ் வீசிய 16-வது ஓவரில் கம்மின்ஸ் தனியொருவராக 35 ரன்கள் குவித்து 14 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதே ஓவரில் கொல்கத்தா அணி 162 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியதன் பின்னர் அந்த அணியின் தலைவர் ரோஹிட் சர்மா இவ்வாறு தெரிவித்தார். ‘பெட் கம்மிண்ஸ் களமிறங்கி இப்படி ஓர் ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நான் எதிர்பார்க்கவேயில்லை.
இதுபோல விளையாடியதற்குப் பாராட்டுகள். துடுப்பாட்டத்தில் நாங்கள் சரியாகத் தொடங்கவில்லை. கடைசி 4 ஓவர்களில் நன்கு விளையாடி 161 ஓட்டங்கள் எடுத்தது நல்ல முயற்சி. 15ஆவது ஓவர் வரைக்கும் ஆட்டம் எங்கள் பக்கம் இருந்தது. ஆனால் கம்மிண்ஸின் ஆட்டத்தினால் நாங்கள் தோற்றுவிட்டோம். கே.கே.ஆர் அணியை வீழ்த்திவிடலாம் என நினைத்தோம். கடைசி சில ஓவர்களில் இந்த ஆட்டம் மாறிய விதத்தை ஜீரணிப்பது கடினம். நாங்கள் இன்னும் கடினமாக உழைக்கவேண்டும்’ என தெரிவித்தார்.