சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் ஐ.சி.சி உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம் இருக்கும். அதுவும் உலக கோப்பை தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் சந்தித்தால் கேட்கவே வேண்டாம். ஆரம்பித்த சில மணி நேரங்களில் மொத்த டிக்கெட்டும் விற்றுத் தீர்ந்துவிடும். அப்படி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத போட்டிகளில் ஒன்றுதான் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதி போட்டி. இதில் இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. மொஹாலியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் குவித்தார். அதன்பிறகு சேஸிங்கில் இறங்கிய பாகிஸ்தான் ட்ரிங்க்ஸ் பிரேக் வரை 4 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜனை பந்துபோட அழைத்தார் தோனி. அந்த தருணத்தை தற்போது நினைவுகூர்ந்திருக்கிறார் ஹர்பஜன். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘இரண்டாவது ஸ்பெல்லில் தோனி என்னை பந்துவீசச் சொன்னபோது நான் நடுங்க ஆரம்பித்தேன்.
அந்த கட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்துகொண்டிருந்தனர். ட்ரிங்க்ஸ் இடைவேளைக்குப் பிறகு பந்து வீசச் சொன்னார். எனக்கு இருந்த பிரஷரை நான் மக்களின் முன்பு காட்ட விரும்பவில்லை’ என்றார். மேலும் அமைதியாக இருந்த தருணத்தை நினைவுகூர்ந்த அவர்,’ முதல் பந்திலேயே எனக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. அது எனது நம்பிக்கையை மீட்டெடுக்க உதவியது. அந்த விக்கெட்டுக்குப் பிறகு நான் அமைதியாகவும் நிதானமாகவும் பந்துவீச துவங்கினேன்’ எனக் குறிப்பிட்டார்.
பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் இந்தியா 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணியின் ஜாஹீர் கான், முனாஃப் பட்டேல், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சச்சின் டெண்டுல்கருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை சந்தித்து சம்பியனானது.